புதுச்சேரி: மறைந்த எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு, பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோவில், " புதுச்சேரி மாநிலத்தில் 3 லட்சம் பேருக்கு கரோனா நோய் தொற்று வர வாய்ப்புள்ளது. ஆகவே மக்கள் அரசு கூறும் கரோனா விதிகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். மத்திய கலாசார குழுவில் நம் மாநில வல்லுநர்கள் இல்லாமல் இருப்பது கவலை அளிக்கிறது. இது கண்டனத்துக்குரியது.
புதுச்சேரி அரசு பணியாளர்கள், கரோனா தடுப்புக்குத் தேவையான மருந்து, மருத்துவ உபகரணங்களை வாங்க ஒரு நாள் சம்பளத்தைத் தர முன்வர வேண்டும். அதேபோல் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும், ஒரு மாத சம்பளத்தை கரோனா தடுப்புப் பணிகளுக்குத் தரவேண்டும். கரோனா நிதி, ஜிஎஸ்டி நிதி, மானியம் போன்ற எதையும் மத்திய அரசு புதுச்சேரிக்கு இதுவரை தரவில்லை.
இந்நிலையில், விவசாய மசோதாக்களுக்கு எதிராக வரும் 28ஆம் திட்டமிட்டபடி காங்கிரஸ் கூட்டணி சார்பாக, புதுச்சேரி, காரைக்காலில், ஒன்பது இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். மறைந்த திரைப்படப் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்திற்கு, பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எஸ்.பி.பி-க்கு நாடக நடிகர் சங்க கலைஞர்கள் அஞ்சலி