புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘நான், அமைச்சர் ஷாஜகான், பிப்டிக் தலைவர் சிவா ஆகியோர் முறையாக பிரதமர் மோடிக்கு கடிதம் அளித்துவிட்டுதான் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டோம். நான் இதற்குமுன் பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்துள்ளேன் எனக்கும் எல்லா சட்ட விதிகளும் தெரியும். இது புரியாமல் கிரண்பேடி தவறான தகவலைக் கூறி வருகிறார்’ என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், புதுச்சேரியில் சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுலா திட்டங்கள் ஷாப்பிங் மால்கள், ஐடி பார்க், தொழில் பூங்காவும், காரைக்காலில் கண்ணாடித் தொழிற்சாலை, பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்டவை அமைக்கவும் சிங்கப்பூர் தொழில்முனைவோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சுமுகமாக நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி, கரசூர் பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் சர்வதேச விமான நிலையம் அமைத்து தர சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. அதேபோல், தற்போது புதுச்சேரி லாஸ்பேட்டையில் இயங்கும் விமான நிலையத்தில் எப்போதும் போல் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும். மிக விரைவில் சென்னை, புதுச்சேரி, காரைக்கால், கன்னியாகுமரி உள்ளிட்ட வழித்தடங்களில் சொகுசு கப்பல் இயக்கப்பட உள்ளது.
சிங்கப்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சுமார் 3,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் இதன் மூலம் பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'ஜனநாயகம் வென்றது' - நாராயணசாமி மகிழ்ச்சி