கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் அலுவலர்கள் சோதனை நடத்தினர். இந்நிலையில், அந்த பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய குற்றவாளிகளைக் கண்டித்தும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் 750-க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தொடர்புடைய இதர குற்றவாளிகளை காவல் துறையினர் உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் புதுச்சேரியில் உள்ள 18 நீதிமன்றங்களிலும் எந்த பணியும் நடைபெறவில்லை.