இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
தற்போது ஊரடங்கு மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள போதும் மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு தளர்வுகளை அறிவித்துவருகின்றன. அதன்படி டெல்லியில் மீண்டும் பொதுப் போக்குவரத்தைத் தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருவதாக டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கஹ்லோட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கைலாஷ் கஹ்லோட் தனது ட்விட்டர் பக்கத்தில், "சில பேருந்து நிலையங்களில் பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு முன் அவர்களின் வெப்பநிலை பரிசோதித்துவருகிறோம். அதை விரைவில் அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் விரிவுபடுத்தவுள்ளோம். பயணிகள் பத்திரமாக தங்கள் பயணங்களை மேற்கொள்ள டெல்லி அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் இன்று குறைந்த அளவு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் கூறுகையில், "எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேருந்துகளை இயக்க முயன்றுவருகிறோம். பல ஒட்டுநர்கள் டெல்லி புறநகர் பகுதிகளில் வசித்துவருகின்றனர். இதனால் அவர்கள் பணிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை பொதுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது முதல் எந்த இடத்திலும், பெரியளவில் பிரச்னை ஏற்படவில்லை. சில பேருந்து நிலையங்களில் மட்டும் காத்திருக்கும் நேரம் அதிகரித்துள்ளது" என்றார்.
இருப்பினும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த காலத்தில் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் முறையாக வழங்கப்படாததால்தான் பல ஒட்டுநர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் - ஜாமியா மாணவர்கள் கைது குறித்து சிதம்பரம்