ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஒன்பது சர்வதேச வாடிக்கையாளர் செயற்கைக்கோள்களுடன் முதன்மை செயற்கைக்கோளாக ஈஓஎஸ் -01ஐ இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. இது பிஎஸ்எல்வி வரிசையில் ஏவப்படும் 51ஆவது ராக்கெட் ஆகும்.
வானிலை நிலைமைகளுக்கு உள்பட்டு இந்திய நேரப்படி மாலை 15:02 மணியளவில் இந்த ராக்கெட் விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது என்று விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவீன ரக இஓஎஸ்-01 செயற்கைகோள், புவிக் கண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளைத் துல்லியமாக மேற்கொள்ளும். இதனுடன் இணைந்து லிதுவேனியா நாட்டிற்கு சொந்தமான ஒரு செயற்கைகோளும், லக்சம்பெர்க்கிற்கு சொந்தமான நான்கு செயற்கைக்கோள்களும், அமெரிக்காவிற்கு சொந்தமான நான்கு செயற்கைகோள்கள் என மொத்தம் ஒன்பது வெளிநாட்டு செயற்கைகோள்கள் வணிக ரீதியாக விண்ணில் ஏவப்படுகின்றன.
விண்வெளித் துறையின் ’நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ (என்எஸ்ஐஎல்) உடனான வணிக ஒப்பந்தத்தின்கீழ் வணிக ரீதியாக செயற்கைக்கோள்கள் ஏவப்படுகின்றன என்று இஸ்ரோ இது குறித்து தெரிவித்துள்ளது.
மேலும். பி.எஸ்.எல்.வி-சி 49இன் இரண்டாம் நிலை (பிஎஸ் 2), நான்காவது நிலை (பிஎஸ் 4) மற்றும் நான்காவது கட்டத்திற்கான (பிஎஸ் 4) ஆக்ஸைசர் நிரப்புதல் பணி நிறைவடைந்துவிட்டதாக இஸ்ரோ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.