புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கென தனி பாடத்திட்டங்கள் இல்லாததால் தமிழ்நாடு கல்வி முறையையே புதுச்சேரி அரசு பின்பற்றிவருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், புதுச்சேரியில் கடந்த 8ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்தச் சூழலில் புதுச்சேரியில் கரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், திறந்திருக்கும் பள்ளிகளை மூட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து புதுச்சேரி அரசை வலியுறுத்திவருகின்றன. ஆனால், பள்ளிகளை மூட புதுச்சேரி அரசு இதுவரை முன்வரவில்லை. இதைக் கண்டித்தும், திறக்கப்பட்டுள்ள பள்ளிகளை உடனே மூட வலியுறுத்தியும், காரைக்கால் வாட்ஸ்அப் போராளிக் குழுவினர் இன்று (அக். 13) முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பள்ளிகளை மூடி, மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற கோரி முழக்கங்களை எழுப்பினர். மேலும், முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகத்துக்குள் நுழைய முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்துநிறுத்தினர். இதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.