புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பினர் சார்பில் சட்டக்கல்லூரி மாணவர்கள் லாஸ்பேட்டை, விமான நிலையம் அருகே திடீரென திரண்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புதுச்சேரி விமான நிலையம் வரை மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டபடி வந்தனர்.
அப்போது விமான நிலையத்திற்கு உள்ளே நுழைய முயன்ற சட்டக் கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் தடுத்தனர். இதையடுத்து, புதிய கல்விக் கொள்கை நகல்களை மாணவர்கள் கிழித்தெறிந்ததால் அவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து, போலீசார் அமைத்த தடுப்புகளைத் தாண்டி விமான நிலையதிற்கு உள்ளே நுழைய முற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.