ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவர், நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு வீட்டுக்குத் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சரானது. இதனால், பதற்றத்துடன் நடுரோட்டில் தவித்துக்கொண்டிருந்த அவருக்கு லாரி ஓட்டுநரும் கிளினரும் உதவி செய்ய முன் வந்துள்ளனர்.
பின்னர், இருவரையும் பார்த்து சந்தேகித்த அம்மருத்துவர், தன் தங்கையிடம் ஃபோனில் பேசியுள்ளார். அப்பெண்ணின் தங்கை அருகிலுள்ள டோல்கேட்டுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
சில நிமிடங்கள் கழித்து மருத்துவரை, அவரது தங்கைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால், மருத்துவரின் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அச்சமடைந்த மருத்துவரின் தங்கை, பெற்றோரிடம் கூறி காவல் நிலையத்தில் தனது அக்காவைக் காணவில்லை என்று புகாரளித்துள்ளார்.
வழக்குப்பதிவு செய்து மருத்துவரைத் தேடி வந்த காவல் துறையினருக்கு, நேற்று காலை ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியிலுள்ள ஷாத்நகர் மேம்பாலத்திற்குக் கீழே எரிந்த நிலையில் பெண் உடல் கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஒருவேளை அது காணாமல் போன பெண் மருத்துவராக இருக்குமோ என்ற சந்தேகத்தில், காவல் துறையினர் அவரது தங்கையையும் அங்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்று பார்த்த அப்பெண், சில அங்க அடையாளங்களை வைத்து, அது தன் அக்காவின் உடலென்று அடையாளம் காட்டினார். பின்னர், பெண் மருத்துவரின் உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
உடற்கூறாய்வு செய்து முடித்ததற்குப் பின், பெண் மருத்துவர் அதிகாலை 3 மணியளவில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, துப்பட்டாவால் அவர் கழுத்தை நெறித்துக் கொன்று பின் எரித்துள்ளனர் என்று கூறிய மருத்துவர்கள், சுமார் ஒரு மணி நேரம் அவர் உடல் எரிந்திருக்கிறது எனவும் அவரது உடலை உடற்கூறாய்வு செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும் தகவலை தெரிவித்தனர்.
இதன் பின்னர் நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை அவர்கள் தேடி வந்தனர். பெண் மருத்துவரின் தங்கை அளித்த தகவலின் அடிப்படையில், ஷாத்நகரில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் காவல் துறையினர் ஆராய்ந்தனர். அதன்மூலம், பெண் மருத்துவரை வன்புணர்வு செய்து கொலை செய்த லாரி ஓட்டுநர், கிளினர் ஆகிய இருவரையும் கண்டுபிடித்து காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களைத் தொடர்ந்து மேலும் இருவரைக் காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் காவல் துறையினர் விசாரித்ததில், பெண் மருத்துவருக்கு உதவி செய்வது போல் நாடகமாடி, பின்னர் கடத்திச் சென்று டோல்கேட்டுக்குப் பின்னால் உள்ள காலி இடத்தில் வைத்து வன்புணர்வு செய்ததாகக் கூறியுள்ளார்கள்.