உத்தரப் பிரதேசத்தில் உள்ள நெசவாளர்களிடம் மின் கட்டணம் புதிய முறையை பயன்படுத்தி வசூலிக்கப்படும் என்று அம்மாநில அரசு சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்த புதிய முறையை பயன்படுத்தினால், நெசவாளர்களுக்கு பெரும் பொருளாதார சுமையை தரும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து பிரியங்கா காந்தி தனது கடிதத்தில், "வாரணாசியில் உள்ள நெசவாளர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர் என்பது என் கவனத்திற்கு வந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற பனாரஸ் பட்டுச் சேலைகளை தயாரித்தவர்கள், இப்போது தங்கள் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யவே சிரமப்படுகின்றனர்.
கோவிட் -19 பரவல் காரணமாகவும் அரசின் தவறான கொள்கைகள் காரணமாக, நெசவாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நெசவாளர்களின் உழைப்பால்தான் உத்தரப் பிரதேசம் உலக புகழ் பெற்றது. எனவே, அவர்களுக்கு உ.பி அரசு உதவ வேண்டும்.
நெசவாளர்களிடம் ஒரே விலையில் மின்சாரத்தை வழங்கும் திட்டத்தை கடந்த 2006ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அறிவித்தது. ஆனால், தற்போதைய அரசு, இத்திட்டதை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது நெசவாளர்களுக்கு பெரும் அநீதியை ஏற்படுத்தும் ஒரு செயலாகும்.
இந்தப் பிரச்னை தொடர்பாக நெசவாளர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது, வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அரசு அவர்களிடம் உறுதி அளித்திருந்தது. ஆனால், இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.
நெசவாளர்கள் தற்போது மூன்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். ஒரே விலையில் மின்சாரத்தை வழங்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள பில்களை செலுத்த வற்புறுத்துவதை நிறுத்த வேண்டும், நெசவாளர்களின் மின்சார இணைப்பை துண்டிக்கக் கூடாது.
நெசவாளர்களின் இந்தக் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அரசு உரிய முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளுக்கு நிதி: டெல்லி, ஸ்ரீநகர் பகுதிகளில் தொடரும் என்ஐஏ சோதனை!