நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்ததால் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால் அதற்குக் காங்கிரஸ் காரியக் குழு சம்மதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ராகுலிடம் பேசியும் பயனில்லாமல் போனது. ராகுல் தன் முடிவில் உறுதியாக இருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று ராகுல் காந்தி தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். மேலும் ராஜினாமா குறித்து விளக்கத்தையும், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த உரையில், "காங்கிரஸ் கட்சியில் தலைவர் பொறுப்பிலிருந்து பணிபுரிந்தது பெருமையளிக்கிறது. காங்கிரஸ் தலைவராக நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு நான் முழுவதும் பொறுப்பேற்க வேண்டும். கட்சியின் எதிர்கால நலன் கருதி நான் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறேன். கட்சியிலிருக்கும் பலர், அடுத்த தலைவரை நான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நான் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பது சரியாக இருக்காது.
பாரம்பரிய வரலாற்றுப் பெருமை கொண்டது காங்கிரஸ். அப்படியிருக்கும் நிலையில் எங்களை வழிநடத்தும் சரியான தலைவரைக் கட்சி அறிவிக்கும் என நான் நம்புகிறேன். எனது போராட்டம் அரசியல் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதற்காக அல்ல. பாஜக முன்னிறுத்தும் இந்தியாவை எதிர்ப்பதேயாகும். இது ஒன்றும் புதிதாகத் தொடங்கிய போராட்டம் அல்ல. நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்த போராட்டம்தான். அவர்கள் எங்கெல்லாம் வேற்றுமை பார்க்கிறார்களோ, அங்கு நான் சமத்துவத்தைப் பார்க்கிறேன். அவர்கள் வெறுப்பை விதைக்கும் இடங்களில், நான் அன்பை விதைக்கிறேன். என்னுடைய இறுதி மூச்சு உள்ள வரை நாட்டுக்காக பணியாற்றுவேன்”, எனக் கூறி இருந்தார்.
ராகுல் காந்தியின் டிவிட்டர் அறிக்கையைப் பகிர்ந்து அவரது சகோதரியான பிரியங்கா காந்தி டிவிட்டரில் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.அதில்,"இந்த துணிவு சிலரிடம் மட்டுமே இருக்கும். ராகுல் காந்தி உங்களின் இந்த முடிவை மனதார மதிக்கிறேன்", என்று தெரிவித்துள்ளார்.