குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. பல இடங்களில் அமைதியாக நடைபெற்ற போராட்டம் சில இடங்களில் வன்முறையில் முடிவடைந்தது. போராட்டத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறின. முக்கியமாக, உத்தரப் பிரதேசத்தில் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
போராட்டத்தின்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், கைதான போராட்டக்காரர்களுக்கு சட்ட உதவி அளிக்கும்படி கட்சி வழக்கறிஞர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், தேசிய மனித உரிமை ஆணையத்திற்குச் சென்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகப் புகார் அளிக்கவுள்ளார். போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினரை ஏவி அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டதாகப் புகாரில் தெரிவிக்கவுள்ளார். அவருடன் உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, சட்டப்பேரவை குழுத் தலைவர் ஆராதனா மிஸ்ரா, நாடாளுமன்ற உறுப்பினர் பூன்யா ஆகியோர் செல்லவுள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு வலுவான எதிர்க்கட்சி தேவை - அபிஜித் பானர்ஜி