அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வருகைபுரிவதற்கு அதிகளவில் செலவிடப்படும் பணம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கென்று அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புக் குழுவின் பங்கு குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
"அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகைக்காக ரூ.100 கோடி பணமானது குழு ஒன்றின் மூலம் செலவிடப்படுகிறது. ஆனால் அந்தக் குழுவின் உறுப்பினர்களுக்கே அவர்கள்தான் அதன் உறுப்பினர்கள் என்று தெரியாது.
இந்தக் குழுவுக்கு எந்த அமைச்சகம் பணம் கொடுத்தது என்று நாட்டிற்குத் தெரிய உரிமையில்லையா? இந்தக் குழுவுக்குப் பின்னால் அரசு எதை மறைக்க முயற்சி செய்கிறது?" என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
'ட்ரம்ப் நாக்ரிக் அபிநந்தன் சமிதி' என்னும் குழுவைதான் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழுதான் அதிபர் ட்ரம்பின் அகமதாபாத் வருகையை கவனித்துக்கொள்கிறது. அதிபரின் வருகையை முன்னிட்டு நகரத்தை அலங்கரிக்க ரூ.100 கோடியை இந்தக் குழு ஒதுக்கியுள்ளது.
இதையும் படிங்க: சிசிஏ போராட்டத்தில் கலந்துகொண்ட சிறுமிக்கு பிரியங்கா காந்தி பரிசு