நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏப்ரல் 14ஆம் தேதிவரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை, மே 3ஆம் வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.
ஊரடங்கு உத்தரவால் தினசரி கூலித் தொழில் செய்பவர்கள், அடித்தட்டு மக்கள் உணவின்றி, அத்தியவாசியப் பொருட்கள் வாங்க பொருளாதார வசதியில்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின், ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியானதையடுத்து, தங்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. இனியும் தங்களால் இங்கு இருக்க முடியாது எனக்கூறி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வேலைசெய்துவந்த வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி, மும்பையின் பாந்த்ராவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தொழிலாளர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஏழைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே ஏன் பிரச்னையை சந்திக்கின்றனர்? ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய அனுமதித்தது ஏன்? என்று மத்திய அரசை சரமாரியாக சாடியுள்ளார்.
ஊடரங்கு உத்தராவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்குக் கூட பணம் இல்லாமல் தவிக்கின்றனர். நாட்டின் முதுகெலும்புகளான கூலி தொழிலாளர்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் பார்க்க: கரோனா: ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள், விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர்