உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நிலங்களை தங்களுக்கு கொடுக்குமாறு மாற்று சமூகத்தினர் அவர்களை கட்டாயப்படுத்தினர். அதற்கு பழங்குடியின மக்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், அங்கு கலவரம் நடந்து 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 28பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்திக்க பிரியங்கா காந்தி சென்றபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அவர் கடைசிவரை போராடி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை பார்த்த பிறகே டெல்லி திரும்பினார்.
இதேபோல்தான், 1977ஆம் ஆண்டு இந்திரா காந்தி மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகு பிகார் மாநிலம் பெல்சியில் பட்டியலின மக்களுக்கு எதிராக மாற்று சமுதாயத்தினர் வன்முறையில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் இறங்கிய இந்திரா காந்தி, பெல்சிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் வருத்தம் தெரிவித்தார். தேர்தலில் தோற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில் அவரை பார்க்க ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அங்கு திரண்டனர்.
பிரியங்காவின் செயல்கள் இந்திரா காந்தியை நினைவூட்டுவதாக உள்ளது என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.