நாட்டில் அடுத்த மூன்று ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவைகளை அதிகரிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்துவருகிறது.
இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் ரயில்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரயில்வே நிர்வாகம் வகுத்துவருகிறது. இந்தக் கட்டுப்பாட்டு வரைவில், தனியார் ரயில்கள் குறைந்தபட்சம் 95 விழுக்காடு நேரம் தவறாமல் இருக்க வேண்டும். அப்படி கடைப்பிடிக்கவில்லை என்றால் ஒரு பெரிய தொகையை அபராதமாக ரயில்வே நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டும்.
இதனுடன், தனியார் ரயில்கள் அதிகபட்சமாக 160 கிமீ வேகத்தில் இயக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். மேலும் சோதனையின்போது 180 கிமீ வேகத்தில் எட்டும் வகையில் வடிவமைக்கலாம்.
இந்த ரயில்கள் அதிகபட்சமாக 140 வினாடிகளில் பூஜ்யம் கிமீ வேகத்தில் இருந்து 160 கிமீ வேகத்தை அடையும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
மேலும், ரயில்களில் அவசரகால பிரேக்குகள் முறையாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அதாவது அதிகபட்ச வேகத்தில் இயங்கும் ரயிலில் அவசரகால பிரேக்குகள் பயன்படுத்தி 1,250 மீட்டர் தூரத்தில் முற்றிலுமாக நிறுத்த வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த தனியார் ரயில்களின் ஆயுட்காலம் 35 ஆண்டுகள் வரை இருக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும். அதேபோல பாதுகாப்பு காரணங்கள் காரணமாக குறைந்தபட்சம் ஆறு கண்காணிப்பு கேமராக்களை ரயில்களில் பொருத்த வேண்டும்.
2023ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் தனியார் ரயில்களை இயக்க தேவையான நடவடிக்கைகள் ரயில்வே நிர்வாகம் எடுத்துவருகிறது. முதற்கட்டமாக 109 வழித்தடங்களில் 151 ரயில்களை தனியார் இயக்க அனுமதி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக 23 நிறுவனங்கள் தனியார் ரயில்களை இயக்க ஆர்வம்காட்டிவருவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும படிங்க: தனியார் ரயில்களில் கட்டணக் கட்டுப்பாடுகள் கிடையாது