இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதன் முதல் நடவடிக்கையாக, பயணிகள் ரயிலை இயக்க தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ரயில்வே துறையின் ஒப்பந்தத்தின் அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் 35 ஆண்டுகளுக்கு ரயிலை இயக்கலாம்.
109 வழித்தடங்கள் வழியாக 151 ரயில்களை இயக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக, தனியார் நிறுவனம் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தனியார் ரயில் சேவை திட்டம் வரும் 2013 ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காணொலி மூலம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் யாதவ், "தனியார் ரயில் சேவைகளின் டிக்கெட் விலையானது, விமானக் டிக்கெட்டுகளுக்கு நிகராக இருக்கும்.
அனைத்து ரயில் பெட்டிகளும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும். இந்த ரயில் பெட்டிகளை தனியார் நிறுவனங்கள் தான் பராமரிக்க வேண்டும்.
மேலும் ரயில் வழித்தடங்கள், ரயில்வே நிலையங்கள், ரயில்வே கட்டமைப்புகள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கான கட்டணங்களை தனியார் நிறுவனம் தான் செலுத்தும்.
முன்னதாக 4 ஆயிரம் கிலோ மீட்டர் வரை இயக்கப்பட்ட பிறகு ரயில் பெட்டிகளை பராமரிக்க வேண்டி இருந்தது. ஆனால் இப்போது 40 ஆயிரம் கிலோ மீட்டர் இயக்கப்பட்ட பிறகு மாதத்தில் ஒன்று அல்லது இரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ரயில் சேவைகள் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், பாட்னா, சண்டிகர், பிரயாக்ராஜ், ஹவுரா, செகந்திராபாத் ஆகிய 12 நகரங்களில் இருந்து இயக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
மேலும், ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதன் மூலம் வேலை வாய்ப்பு பறிபோகும் என்ற அச்சம் எழுந்துள்ளதே என்று கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “தற்போது இயக்கப்படும் ரயில் சேவைகளில் ஐந்து விழுக்காடு மட்டுமே தனியாருக்கு வழங்கப்படும். இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் இந்த ரயில் சேவைகளுக்கு தேவை இருக்கும் என்பதால் ரயில்வேயில் வேலைவாய்ப்பு நிச்சயம் அதிகரிக்கும்" என்றார்.
இதையும் படிங்க: வரி விதித்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது சரியல்ல!