லக்னோ (உத்தரப் பிரதேசம்): கரோனா பரவல் அச்சம் காரணமாக, கைதிகளின் பாதுகாப்பு கருதியும், கூட்டத்தைக் குறைப்பதற்காகவும், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிறைகளிலிருந்து இரண்டாயிரத்து 256 சிறைக் கைதிகள் கடந்த மே மாதம் பிணை, பரோலில் விடுவிக்கப்பட்டனர்.
பரோலில் வெளியே வந்தவர்களில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், 136 பேரின் தண்டனைக் காலம் முடிவடைந்ததாகவும், 56 பேர் வேறு வழக்குகளில் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டதாகவும் சிறைத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய சிறைத் துறை டிஜிபி ஆனந்த் குமார், "தற்போது வெளியே உள்ள இரண்டாயிரத்து 63 கைதிகள் நவம்பர் 23ஆம் தேதிக்குள் சிறைக்குத் திரும்ப வேண்டும் என அவரவர் குடும்பத்தினருக்கு முன்னதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி 693 கைதிகள் மட்டுமே சிறைக்குத் திரும்பியுள்ளனர். எனவே சிறைக்குத் திரும்பாதவர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
பிலிபிட் மாவட்ட சிறையிலிருந்து ஏப்ரல் 29ஆம் தேதி விடுவிக்கப்பட்ட 15 சிறைக் கைதிகளில், 8 பேர் தலைமறைவாக உள்ளதாக, அந்தச் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்ற 15 குற்றவாளிகளில் 7 பேர் மட்டுமே சிறைக்குத் திரும்பியுள்ளதாக, சிறை கண்காணிப்பாளர் விவேக் சீல் திரிபாதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவின் டாப் சுற்றுலாத்தளமாக உருவெடுத்த உ.பி ; 2வது இடத்தில் தமிழ்நாடு!