இந்திய விமானப்படை தினத்தையொட்டி டெல்லியில் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் முப்படைத் தளபதிகள் மரியாதை செலுத்தினர். ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இந்திய ராணுவத்தின் முப்படைகளில் ஒன்றான விமானப் படை, உலகளவில் சக்திவாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது 1932 அக்டோபர் 8ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதனையடுத்து டெல்லியில் உள்ள காசியாபாத் அருகே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு 87ஆவது இந்திய விமானப்படை தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹில்டன் விமான தளத்தில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. கண்கவர் அணிவகுப்பு மரியாதை, விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. சினூக், அபாச்சி ரக ஹெலிகாப்ட்டர்கள் வானில் வட்டமடித்து சாகசங்களை நிகழ்த்திவருகின்றன. ஆசியாவில் உள்ள விமானப்படை தளங்களில் ஹில்டன் ஏர் பேஸ் மிகப்பெரியதாகும்.
விமானப்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்திய விமானப்படை வீரர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு நமது பெருமைமிகு தேசம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது. இந்திய விமானப்படை மிகுந்த அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் இந்தியாவுக்கு தொடர்ந்து சேவையாற்றும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "விமானப்படை தினமான இன்று விமானப்படை வீரர்களின் குடும்பங்களைப் பெருமையுடன் மதிக்கிறோம். வீரர்களின் தைரியம்தான் நம் வான் எல்லையைப் பாதுகாக்கிறது. துணிச்சலான ஆண், பெண்களின் தியாகத்திற்காக இந்தியா எப்போதும் கடமைப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.