இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அகமதாபாத்திலுள்ள மொடீரா மைதானத்தில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, "வரலாறு மீண்டும் படைக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். ஐந்து மாதங்களுக்கு முன்பு, நான் எனது அமெரிக்க பயணத்தை 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியுடன் தொடங்கினேன்.
அதேபோல, இப்போது அதிபர் டரம்ப் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியுடன் இந்திய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். உலகின் பெரிய ஜனநாயக நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்களை வரவேற்பதில் ஒட்டுமொத்த நாடும் உற்சாகம் கொள்கிறது.
இந்த நிகழ்ச்சியின் பெயருக்கு ஆழமான பொருள் உண்டு. 'நமஸ்தே’ என்ற வார்த்தை உலகின் பழமையான மொழியான சமஸ்கிருதத்திலிருந்து தழுவப்பட்டது. மனிதர்களுக்கு மட்டும் மரியாதை செலுத்தாமல் உள்ளிருக்கும் தெய்வீகத்தன்மைக்கும் மரியாதை செலுத்துவதற்கு 'நமஸ்தே' என்ற சொல்லின் பொருள்.
இந்திய, அமெரிக்கா நாடுகளுக்கிடையே நெருங்கிய உறவு உள்ளது. சுதந்திரத்தைப் போதிக்கும் நாடாக அமெரிக்கா விளங்குகிறது. உலகம் ஒரு குடும்பம் என்பதை இந்தியா போதிக்கிறது. சுதந்திர தேவி சிலையால் அமெரிக்காவுக்கு பெருமை. சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமைக்கான சிலையால் இந்தியாவுக்கு பெருமை. விழுமியங்கள், கொள்கைகள், கண்டுபிடிப்புகள், வாய்ப்புகள், சவால்கள் எனப் பலவற்றை இரு நாடுகளும் பகிர்ந்துகொள்கின்றன" என்றார்.
இதையும் படிங்க: சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றிய ட்ரம்ப்