குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. சுமார் 2.5 கோடி பேரிடம் கையெழுத்துக்களைப் பெற்ற பின்பு அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.
இந்தச் சூழலில், திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தூத்துக்குடி எம்பி கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்பி நவாஸ் கனி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுவை அளித்தனர். இந்தச் சந்திப்பு குடியரசுத் தலைவர் மாளிகையில் சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.
இதனையடுத்து தமிழ்நாட்டு எம்பிக்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய டி.ஆர். பாலு, ”குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கம் தொடர்பாக தமிழ்நாட்டில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்து குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தோம்.
நாங்கள் பேசிய விஷயங்களை 20 நிமிடம் கேட்ட குடியரசுத் தலைவர் அரசுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். மேலும் போராட்டங்களை அமைதியான முறையில் நடத்த வேண்டுமென்றும் குடியரசுத்தலைவர் வலியுறுத்தினார்” என்றார்.
மதிமுக பொதுச்செயலாளரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ பேசும்போது, "கற்றறிந்தவர்கள் முதல் கழனியில் வேலை செய்யும் சாமானியர் வரை அனைவரும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து போட்டுள்ளனர் என்று விளக்கினோம். யாரையும் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கப்படவில்லை. எல்லோரும் தானாக முன்வந்து கையெழுத்திட்டனர் என்று குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தோம்" என்றார்.