மக்களவைத்தேர்தல் பரப்புரை நாடெங்கும் தீவிரமாக நடைபெற்றும் வரும் வேளையில், ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண்சிங் ஆளும் பாஜகதான் வெற்றி பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, கடந்த மாதம் தனது சொந்த ஊரான அலிகார்க் பகுதியில் பேசிய கல்யாண்சிங், "நாமெல்லாம் பாஜக தொண்டர்கள். பாஜக வெற்றி பெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எல்லோருமே மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என விரும்புகின்றனர். மோடி பிரதமராவது நாட்டிற்கும், சமூகத்திற்கும் கட்டாய அவசியம்" எனக் கூறினார்.
இதனிடையே அரசியலமைப்பு பதவியில் உள்ள ஒருவர் நடுநிலையோடு அல்லாமல், கட்சி சார்பாக பேசி இருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய ஆளுநர் கல்யாண்சிங் குறித்த புகாரை தேர்தல் ஆணையமானது குடியரசுத்தலைவரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் புகாரை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், இது தொடர்பாக ஆளுநர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
1990களில் உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக பதவி புரிந்த கல்யாண்சிங், தற்போது ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக பேசி சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்.
தற்போது வரை சர்ச்சைக்குரிய விவகாரமாக இருந்து வரும் பாபர் மசூதி இவரது ஆட்சிக்காலத்தில்தான் இடிக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு பாஜகவை விட்டு வெளியேறிய கல்யாண்சிங் மீண்டும் 2004ஆம் ஆண்டு கட்சிக்குள் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் 2014ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.