புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் காலாப்பட்டில் செயல்பட்டுவருகிறது. இப்பல்கலைகழகத்தின் 27ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து 10 பேருக்கு தங்கப்பதக்கங்களை வழங்கிய குடியரசுத் தலைவர் சிறப்புரை நிகழ்த்தினார். இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு 322 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.
அதில், ’’புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 27ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரி என்றும் கவிஞர்கள், தேசபக்தர்கள், தெய்வ பக்தி நிறைந்தவர்களின் நிலமாக உள்ளது. புதுச்சேரி பிரான்ஸ் மற்றும் தமிழ் கலாசாரத்தின் சிறந்த செயற்கையாக உள்ளது. புதுச்சேரி, உலகம் முழுவதும் அறியப்பட்டதற்கு காரணம் மகரிஷி அரவிந்தரும், மகாகவி, அரவிந்த ஆசிரமம் ஆரோவில்தான் என்று பாராட்டினார்.
தொடர்ந்து, ’’தூய்மை இந்தியா இயக்கத்தை செயல்படுத்திய முதலாவது பல்கலைக்கழகமாக இந்த புதுச்சேரி பல்கலைக்கழகம் விளங்குகிறது. பெண்கள் அதிகளவில் தங்கப்பதக்கம் மற்றும் பட்டம் பெற்றுள்ளது எதிர்கால இந்தியாவை பிரதிபலிக்கிறது'' என்றார். இந்த பட்டமளிப்பு விழாவில மொத்தம் 19ஆயிரத்து 289 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவரின் புதுச்சேரி வருகையையொட்டி ஆயிரத்து 500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் சென்னை வருகை - ஆளுநர், முதலமைச்சர் வரவேற்பு!