மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பெயர், கல்வித்துறை என மாற்றப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார். தேசிய கல்வி கொள்கை 2020 வழங்கிய பரிந்துரைகளில் அமைச்சகத்தின் பெயர் மாற்றமும் ஒன்றாகும். இதற்கு, மத்திய அமைச்சகம் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பெயர் கல்வித்துறை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, மனிதவள மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக ரமேஷ் பொக்ரியால் பதவி வகித்துவருகிறார்.
ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது, 1985ஆம் ஆண்டு கல்வித்துறை அமைச்சகம், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் என பெயர் மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1986ஆம் ஆண்டு தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டது. 1992ஆம் ஆண்டு அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மனிதவள மேம்பாட்டுத்துறையின் முதல் அமைச்சராக பி.வி. நரசிம்ம ராவ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய கல்வி கொள்கையை வகுப்பதற்காக ஒரு புதிய குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் தலைவராக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் நியமிக்கப்பட்டார். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என இக்குழுவே பரிந்துரை செய்தது.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும்-உயர் நீதிமன்றம்