நாட்டு நிர்வாகத்தின் முதுகெலும்பாக மக்கள் பணியாளர்கள் விளங்குகின்றனர். அவர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக மக்கள் பணியாளர்கள் தினம் ஏப்ரல் 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. திட்டங்களையும் கொள்கைகளையும் அரசு வகுக்கிறது. அவற்றை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் மக்கள் பணியாளர்களான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அலுவலர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்கள் பணியாளர்கள் தினத்தை முன்னிட்டு இந்நாள், முன்னாள் அலுவலர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுநலனுக்காக திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை செயல்படுத்துவதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
கூர்ந்து அறியும் திறன், தொழில் சார்ந்த மனப்பான்மை ஆகியவற்றை கொண்டு கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதில் மக்கள் பணியாளர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். மக்கள் சேவையில் அவர்கள் தொடர்ந்து பங்காற்றுவார்கள் என்பதில் நன்பிக்கையோடு இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ம.பி.யில் அமைச்சரவை விரிவாக்கம்: சிந்தியா ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி