ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ‘பிரதமர் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என தெரிவித்தார். இதனையடுத்து அரசின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் தேர்தல் நேரத்தில் இது போன்று ஒரு கட்சி சார்பாக பேசுவது தவறு என எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் விமர்சித்துவந்தனர்.
இந்நிலையில் இது குறித்து வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி இருப்பதாக தெளிவுபடுத்தியது. பின்னர் இந்த புகாரை குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிவைத்தது.
இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர், தேர்தல் விதிமீறிய ஆளுநர் கல்யாண் சிங் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உள் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.