விவசாயிகளுக்கு எதிரான அவசர சட்டத்தை நிறைவேற்ற பாஜக முயல்வதாகக்கூறி நேற்று (செப் 17) ஹர்சிம்ரத் கவுர் பாதல், தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து பிரதமருக்கு எழுதிய ஹர்சிம்ரத் கவுர் பாதல் எழுதிய ராஜினாமா கடிதத்தில், 'விவசாயிகளின் அச்சங்களையும், பிரச்னைகளையும் நிவர்த்தி செய்யாமல், விவசாயிகளுக்கு எதிராக இந்திய அரசு இயற்றும் காரியங்களில் ஷிரோமணி அகாலி தளம் கட்சி ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என எடுக்கப்பட்ட முடிவு இதுவாகும்' எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், 'விவசாயிகளை சிதைக்கும் சட்டத்தை எதிர்த்து நான் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தேன். நான் விவசாயிகளின் மகளாக, சகோதரியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்' எனப் பகிரங்கமாகப் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து பிரதமரின் ஆலோசனையின்பேரில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் குழுவில் இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். இதற்கிடையில், ஹர்சிம்ரத் கவுர் கவனித்து வந்த உணவுப்பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தின் பொறுப்பை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கூடுதலாக வழங்குமாறு குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தாலும் ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் கூட்டணி தொடரும் எனவும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீரில் வெடிபொருள்கள் கண்டெடுப்பு - பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிப்பு!