இது தொடர்பாக மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த அலுவலர் ஒருவர் கூறியதாவது,
'நாட்டில் கோவிட்-19 பாதிப்பு காரணமாக லாக் டவுன் அமலில் உள்ளது. இதனால் பள்ளிகளும் மூடப்பட்டதால் நிலுவையில் உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான வாரியத் தேர்வுகளை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
முதல் வாய்ப்பில் இளங்கலை படிப்பு சேர்க்கைக்கும் முக்கியமான 29 பாடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படும். தேர்வுகள் நடத்தப்படுவதற்கு முன்னர், மாணவர்களுக்கு குறைந்தது 10 நாட்கள் முன் அறிவிப்பு வழங்கப்படும்.
ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான மதிப்பீட்டு செயல்முறையைத் தொடங்குமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு வசதியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது',இவ்வாறு அந்த மூத்த அலுவலர் கூறினார்.
29 பாடங்களின் பட்டியலில் சேர்க்கப்படாத முக்கியமான பாடங்களைக் குறிப்பது அல்லது மதிப்பீடு செய்வதற்கான வழிமுறைகளையும் சிபிஎஸ்இ வெளியிடும். முன்னதாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் செவ்வாய்க்கிழமை (ஏப்.28) மாநிலங்களின் கல்வி அமைச்சர்களுடன் உரையாடினார்.
அப்போது டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, 'தற்போது நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை என்பதால், மாணவர்களை உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும்' என்று பரிந்துரைத்திருந்தார்.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் கல்வி அமைச்சராக இருக்கும் சிசோடியா, 'டெல்லி மாணவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு சொந்த வாரியங்களைக் கொண்டிருப்பதால், தேர்வுகளை நடத்துவதில் தாமதம் ஏற்படும். இதனால் அதிக பாதிப்பு ஏற்படும்' எனவும் எச்சரித்தார்.
எனினும், தேசிய தலைநகரம் சிபிஎஸ்இ மட்டுமே பின்பற்றுகிறது என்றும் கூறினார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்களும் அந்தந்த மாநில வாரியங்கள் குறித்து விவாதித்தார்கள். பிகார் வாரியம் ஏற்கெனவே 12ஆம் வகுப்பின் மூன்று பாடங்களின் முடிவுகளை அறிவித்துள்ளது.
இதையடுத்து 12ஆம் வகுப்புத் தேர்வுகளை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. உத்தரப் பிரதேச வாரியம் இன்னும் மதிப்பீட்டைத் தொடங்கவில்லை. இது தொடர்பாக விரைவில் அழைப்பு விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகள் தொடர்பாக ஏராளமான ஊகங்கள் எழுந்தன. இதற்கு சிபிஎஸ்இ புதன்கிழமை (ஏப்29) ட்வீட் வாயிலாக விளக்கம் அளித்தது. அதில், மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக ஜூன் மாதத்தில் ஜே.இ.இ மற்றும் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிற இளங்கலை சேர்க்கைகளுக்கு, பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) புதிய கல்வி அமர்வுக்கான மாற்று நாட்காட்டி வழிமுறையில் செயல்படுகிறது. இது ஒரு வாரத்திற்குள் காலக்கெடுவை அறிவிக்கும்.
இது குறித்து ஏழு பேர் கொண்ட பல்கலைக்கழக குழு ஏற்கெனவே சில பரிந்துரைகளை அறிவித்துள்ளது. அதில், ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இளங்கலை சேர்க்கை செயல்முறையும், புதியவர்களுக்கான புதிய அமர்வு செப்டம்பர் முதல் தொடங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
இருப்பினும், இது தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. சிபிஎஸ்இ ஏற்கெனவே வெளிநாடுகளில் உள்ள மாணவர்களுக்கு எந்தத் தேர்வையும் நடத்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாடு முழுவதும் வகுப்பறைகள் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்த மார்ச் 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களும் பள்ளிகளும் மூடப்பட்டன.
பின்னர், மார்ச் 24 அன்று நாடு தழுவிய லாக் டவுன் (பூட்டுதல்) அறிவிக்கப்பட்டது. இது தற்போது வருகிற (மே) 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க அவசர சட்டம்