உத்தரப்பிரதேச மாநிலம், ஜோத்புரா என்ற பகுதியில் பிங்கி என்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் காலைக்கடன் முடிக்க வயலுக்குச் செல்லும் வழியில், பிரசவ வலி ஏற்பட்டு, அந்த இடத்திலேயே குழந்தையைப் பெற்றுள்ளார். பின்னர், அதே இடத்திலேயே மயக்கம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் அந்தப் பெண்ணைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தின் உறுப்பினர்கள் தேடத் தொடங்கியுள்ளனர். சிறிது நேரம் கழித்து அப்பெண் வயலில் மயக்கமடைந்து கிடந்ததைக் கண்டுள்ளனர். ஆனால், அவ்விடத்தில் பிறந்த குழந்தை அந்த இடத்தில் இல்லை என்று அறியப்படுகிறது.
இதுகுறித்து பிங்கி கூறுகையில், 'கழிவறை செல்வதற்காக நான் வயல் புறமாகச் சென்றேன். அப்போது எனக்கு வலி ஏற்பட்டது. பின்னர், எனக்கு குழந்தை பிறந்தது. அதன்பின் உறவினர்கள் என்னை வீட்டிற்கு அழைத்து வந்தது மட்டுமே எனக்குத் தெரியும்' எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், 'பிங்கி வயல்வெளியில் மயக்க நிலையில் இருப்பதைக் கண்டோம். பின்னர் அவரை அந்த இடத்திலிருந்து நாங்கள் மீட்டு வந்தோம். ஆனால் அவள் பெற்றெடுத்த குழந்தை அருகில் இல்லை.
தற்போது காணாமல் போன அந்த பிறந்த குழந்தையை யாரேனும் திருடி இருக்கலாம் அல்லது காட்டு விலங்குகள் எடுத்துச் சென்றிருக்கலாம் என உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்த கழிவறை பிரச்னை குறித்து பலமுறை அரசாங்க அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும்; அவர்கள் அதை தட்டிக் கழித்து வருகின்றனர்' எனத் தெரிவித்தனர்.