உத்தரப் பிரதேசம் மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் கடந்த சில மாதங்களாக மிகவும் பலவீனமாகக் காணப்பட்டதை அடுத்து அவருடைய பெற்றோர் மருத்துவரை அணுகியுள்ளனர். இதையடுத்து செய்யப்பட்ட பரிசோதனைகளில் அந்தச் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இந்தத் தகவலால் அதிர்ச்சி அடைந்த சிறுமி வாட்ஸ் அப் மூலம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க பெண் காவலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டது.
இந்த விசாரணையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தச் சிறுமி மூன்று நபர்களால் பலமுறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் கூறும் போது சிறுமியின் மோசமான உடல்நலம் தான் இந்த விஷயம் வெளிவர முதல் காரணம் என்றார்.
முதலாவதாக ஸ்ரீசந்த் (72) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இரண்டாவதாக, ஸ்ரீசந்தின் சகோதரர் பால்வீர் (52) சிறுமிக்கு சில தடவை பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
மூன்றாவதாக அப்பகுதியில் பால் விற்பனை செய்யும் மகேஷ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இதில் இருவரைக் காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்ட பால்வீர் 1.5 லட்சம் ரூபாயைக் நொய்டாவைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து கடனாக வாங்கிக் கொடுத்ததும், அதைத் திருப்பிச் செலுத்துவதில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.