கரோனா பாதிப்பால் நாடு முழுவதும் போக்குவரத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் விமான சேவையும் அடக்கம். ஊரடங்கின் ஆரம்பத்தில் முற்றிலுமாக நிறுத்திவைக்கப்பட்ட விமான சேவை படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் முன்பைப் போல அதிகமான உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படாமல் குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்படுகின்றன.
தற்போது பாதிக்குப் பாதி விமானங்களே செயல்பாட்டில் உள்ளன. எப்போது உள்நாட்டு விமான சேவை 100 விழுக்காடு வழங்கப்படும் என்று விமானத் துறை சார்ந்த நிபுணரான அமெயா ஜோஷியிடம் கேட்டோம்.
அதற்கு அவர், “கரோனாவுக்கு எதிரான மருந்து கண்டுபிடித்த பின்னரே எதையும் உறுதியாகக் கூற முடியும். அதுவரையில் தற்போதுள்ள முறையே கடைப்பிடிக்கப்படும். கரோனாவுக்கு முன் இருந்த நிலை போல அனைத்து விமானங்களையும் இயக்க வேண்டும் என்றால் கரோனாவுக்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பதே ஒரே வழி” என்றார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த விமானத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்த வருட இறுதியில் விமான சேவை பழைய நிலைக்குத் திரும்பும் என்று கூறியிருந்தார்.