'பிகார் கி பாத்' என்ற பரப்புரை நிகழ்வில் தேர்தல் வியூக ஆலோசகரான பிரஷாந்த் கிஷோர் மோசடி செய்ததாகக் கூறி, பிகார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரபல தேர்தல் வியூக ஆலோசகரான பிரஷாந்த் கிஷோர் 'ஐ பாக்' (I PAC) என்ற அமைப்பை நடத்தி பல்வேறு கட்சிகளுக்கான தேர்தல் வியூகத்தை அமைத்துத் தருகிறார்.
பிகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார், இவரின் திறமையால் ஈர்க்கப்பட்டு தனது கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் தனக்கு அடுத்தபடியான முக்கிய இடத்தில் பிரஷாந்த் கிஷோரை அமர்த்தினர்.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மாற்று கருத்து தெரிவித்த பிரஷாந்த் கிஷோர், கூட்டணிக் கட்சியான பாஜகவை எதிர்த்தார். மேலும், முதலமைச்சர் நிதீஷ் சரியான வழியில் செயல்படவில்லை என மறைமுகமாக குற்றம் சாட்டவே, கட்சியிலிருந்து கிஷோர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து பிகார் அரசியல் களத்தில் தனியாக செயல்படப்போவதாக அடுத்த நகர்வை முன்னெடுத்த பிரஷாந்த் கிஷோர், 'பிகார் கி பாத்' என்ற பெயரில் பரப்புரையைத் தொடங்கியுள்ளார்.
இந்த 'பிகார் கி பாத்' பரப்புரை மோசடியானது எனவும், இதன் அம்சங்கள், கருத்துகள் களவாடப்பட்டவை எனவும் குற்றம்சாட்டி சட்டப்பிரிவு 420, 406 ஆகியவற்றில் பிரஷாந்த் கிஷோர் மீது பிகார் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: 'செய்ய முடியாததையும் செய்து காட்டியவர் ஜெயலலிதா' - அமைச்சர் புகழாரம்