கரோனா ஊரடங்கில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்த துயரம், பீமா கோரேகான் விவகாரத்தில் சமூக செயல்பாட்டாளர்களின் கைது உள்ளிட்டவற்றில் உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து, பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனங்களை முன்வைத்தார்.
இவரது கருத்துகள் நீதிமன்றத்தை அவமதிக்கும்விதமாக உள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதில், பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை செலுத்தத் தவறினால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரசாந்த் பூஷண் தனக்கு விதிக்கப்பட்ட அபராதமான ஒரு ரூபாயை இன்று உச்ச நீதிமன்றத்தில் செலுத்தினார். மேலும், தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாகவும், அபராதத்தை சமர்ப்பித்ததால் தீர்ப்பை ஏற்றுக் கொண்டதாகக் கொள்ளக்கூடாது என்றும் கூறினார்.