மத்தியப் பிரதேசத்தின் போபால் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரக்யா சிங் தாக்கூர். பாஜகவின் பிரபல பெண் பிரமுகர்களான ஸ்மிரிதி இரானி, உமாபாராதி போன்றோருடன் அதிக நெருக்கம் உடைய இவர், அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவது வழக்கம். ‘கழிவறையை சுத்தம் செய்யவா எம்பி ஆனேன்’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கேள்வியை முன்வைத்தவரும் சாக்ஷாத் இவரேதான்.
மும்பை ரயில் குண்டுவெடிப்பில் இவரது பெயரில் 4,000 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்துக்கும் வீட்டிற்குமாய் இழுத்தடித்தது மகாராஷ்டிர போலீஸ். இந்த நிலையில் அவை அனைத்திலிருந்தும் ஒருவழியாக வெளிவந்து தற்போது எம்பி என்ற அரசியல் அதிகாரத்துடன் வலம் வந்துகொண்டிருக்கிறார் பிரக்யா சிங் தாக்கூர்.
இதற்கிடையே அண்ணல் காந்தியடிகள் குறித்து தற்போது பேசியுள்ள இவர், ‘காந்தி இந்த நாட்டின் புதல்வன். மண்ணின் மைந்தரான காந்திபோல் கடவுள் ராமர், மகரானா பிரதாப், சிவாஜி மகராஜ் உள்ளிட்டோரும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான்’ என்று கூறியுள்ளார்.
காந்தியை தேசத்தின் தந்தையாக அனைவரும் போற்றிக்கொண்டிருக்க, நாட்டின் புதல்வர் என்று பிரக்யா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'நாதுராம் கோட்சே என்றுமே ஒரு தேச பக்தர்தான்..!' - பிரக்யா சிங் தாகூர் சர்ச்சை பேச்சு