இந்தியா - சீனா படைகளுக்கிடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ஆம் தேதி எழுந்த மோதலை அடுத்து, இந்தியா தனது போர்க்கப்பலை தென் சீன கடலுக்கு அனுப்பியது. இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது, இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தற்போது இந்திய போர்க்கப்பல் நிறுத்தப்பட்ட தென் சீனக் கடலில் செயற்கைத் தீவுகளை சீனா ஏற்படுத்தி அங்கு படைகளை குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. அப்பகுதிக்கு இந்திய போர்க்கப்பல் கடந்த 2009ஆம் ஆண்டு சென்றபோதும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
"கல்வான் பள்ளத்தாக்கில் எழுந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதையடுத்து, அப்பகுதிக்கு போர்க்கப்பல் அனுப்பப்பட்டது. தென் சீனக்கடலின் பெரும்பகுதி தங்கள் பகுதி என சொந்தம் கொண்டாடும் சீனா அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது" என அரசு அலுவலர்கள் கூறுகின்றனர்.
அப்பகுதியில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கப்பற்படையுடன் தொடர்ச்சியான தகவல் பரிமாற்றத்தில் இந்திய போர்க்கப்பல் ஈடுபட்டுள்ளது. இந்நடவடிக்கை வெளியே தெரியக்கூடாது என ரகசியமாக நடத்தப்பட்டதாகவும், அங்கு நிறுத்தப்பட்டுள்ள இந்திய போர்க்கப்பல் வெளிநாட்டு கப்பல்களின் நடவடிக்கையை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தென்சீனக் கடலில் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டிருப்பது போல அந்தமான் தீவுக்கு அருகேயுள்ள மலாக்கா நீரிணை பகுதியிலும் இந்திய போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. சீனாவின் வணிகக் கப்பல்கள் மலாக்கா நீரிணையைக் கடந்து செல்லும் என்பதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இந்தியா – சீனா மோதலில் பாகிஸ்தானின் பங்கு!