கரோனா வைரஸ் பரவல் காரணமாக, குஜராத்தின் கிர் வனப்பகுதியில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கிடப்படும் காட்டுயிர் தொகை, கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாத நிலை தொடர்ந்து வந்தது.
இந்நிலையில், முழுநிலவு நாள்களான ஜூன் 5 மற்றும் ஜூன் 6 ஆகிய இரு இரவுகளில் வனத்துறையினர் "காட்டுயிர் தொகை மதிப்பீட்டுப் பயிற்சியை" மேற்கொண்டனர்.
அப்போது, ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்தச் செய்தியை பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதற்காக மக்களின் சமூகப் பங்களிப்பையும் பாராட்டினார்.
குறிப்பிட்ட ட்விட்டர் பதிவில், "நாட்டு மக்களுக்கு இரண்டு நல்ல செய்தி: குஜராத்தின் கிர் காட்டில் வசிக்கும் கம்பீரமான ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 29 விழுக்காடு உயர்ந்துள்ளது. புவியியல் ரீதியாக, விலங்குகள் வாழும் நிலப்பகுதி 36 விழுக்காடு உயர்ந்துள்ளது.
குஜராத் மக்களின் சமூக பங்களிப்பே, இந்த சிறந்த சாதனைகளுக்கு வழிவகுத்திருப்பது நம் அனைவருக்கும் பெருமை" என்று அவர் எழுதியுள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சி, வனவிலங்கு சுகாதாரப் பாதுகாப்பு, முறையான காட்டுயிர் வாழ்விட மேலாண்மை மற்றும் மனித - சிங்க மோதல் குறைப்பு ஆகியவற்றோடு மக்களின் சமூகப் பங்களிப்பும் இந்த முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
வனத்துறையினரின் தரவுகளின்படி, ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 523 என்பதில் இருந்து 674ஆக ஐந்தாண்டுகளில் உயர்ந்துள்ளது. அதாவது, 2015ஆம் ஆண்டில் இருந்த 27 விழுக்காட்டிலிருந்து ஏறத்தாழ 28.87 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சிங்கங்கள் உலாவிய நிலப்பகுதி 22,000 சதுர கி.மீ பரப்பிலிருந்து 30,000 சதுர கி.மீ ஆக உயர்ந்துள்ளது. அதாவது, பரப்பளவு 36 விழுக்காடு அதிகரித்துள்ளது.
முக்கியமாக குஜராத் வனத்துறையின் பயனுள்ள பாதுகாப்பு மற்றும் மேலாண்மை காரணமாக, ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை மற்றும் காட்டின் பரப்பளவில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.