புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ நிறுவனம் சார்பில் பெட்ரோல் பங்குகள், காய்கறிகள் விற்பனையகம், உழவர் விதைப் பொருட்கள் விற்பனையகம் உள்ளிட்ட நிறுவனங்களில், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 32 மாதங்களாக, இவர்களுக்குச் சரியாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக்கூறியும்; இதற்கிடையே நிலுவை மாத சம்பளத்திற்காக கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டு காலதாமதம் ஏற்பட்டுள்ளது எனக்கூறியும் ஆளுநர் மாளிகை அருகே பாப்ஸ்கோ ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களது போராட்டத்தால் ஆளுநர் மாளிகை அருகே பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டு, ஆங்காங்கே தடுப்புகள் போடப்பட்டிருந்தன.
இதையடுத்து சமூக இடைவெளியுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.