புதுச்சேரி பாஜக தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சுவாமிநாதன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது,
"உலக வங்கி அளித்துள்ள நிதியிலிருந்து, புதுச்சேரி பழைய மேரி கட்டடம், தேங்காய்த்திட்டு துறைமுக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், காரைக்கால் மார்க்கெட் வளாகம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற புதுச்சேரி அரசு ரூபாய் 250 கோடிக்கு மேல் நிதி பெற்றது. ஆனால் இத்திட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடியாமல் ஊழல் நடந்துள்ளது.
இந்நிலையில் உலக வங்கி அலுவலர்கள் இன்று (ஜன 29) புதுச்சேரி வரவுள்ளதாகத் தெரிகிறது. அவர்களைச் சந்திக்கும்போது புதுச்சேரி மக்களுக்கான பயனுள்ள திட்டங்கள் கிடப்பில் உள்ளன. எனவே காலக்கெடுவை மார்ச் 2020-க்கு மேல் நீட்டித்து தர வேண்டும்.
மேலும் இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திட வேண்டும் எனவும், உண்மை நிலையை வெளிக்கொணர்ந்து இத்திட்டத்தில் உள்ள தகுதியற்ற அலுவலர்களை உடனடியாக மாற்றிவிட்டு நல்ல திறமையான அலுவலர்களை நியமித்து பணியை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கவுள்ளேன்" என்றார்.
மேலும் புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு என்றால் மத்திய அரசிடம் நிறுத்தக்கோரி வலியுறுத்துவேன் எனச் சொன்ன அவர், தற்போது காங்கிரஸ் ஆட்சியில் வரலாறு காணாத அளவில் ஊழல் அதிகரித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். புதுச்சேரியில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரே ஊழல் குற்றச்சாட்டை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சங்கர், செல்வகணபதி ஆகியோர் உடனிருந்தனர்.