புதுச்சேரியின் துத்திப்பட்டு கிராமத்தில் தனியார் டெக்னாலஜி நிறுவனம் கிரிக்கெட் மைதானத்தை அமைத்துள்ளது. இங்கு ரஞ்சி போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. அரசு நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் ஊசுட்டேரி பாதுகாப்பு இயக்கத்தினர் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆட்சியர் அருணுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "புதுச்சேரி துத்திப்பட்டில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து தனியார் (Seichem) கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது. அத்துடன் நீர்நிலை ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டிருப்பது ஆவணங்களில் தெரிய வந்துள்ளது. எனவே, அரசு நிலம், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.
மைதான வளாகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நிறுத்த வேண்டும். இது குறித்து அனைத்து துறையினரும் ஆய்வு செய்ய வேண்டும். விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதை நீங்கள் (ஆட்சியர்) தனிப்பட்ட முறையில் தவிர்த்திருந்தாலும், அங்குள்ள முழு விவரத்தை ஆளுநர் மாளிகைக்கு தெரிவிக்க தவறிவிட்டீர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.