புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கிவரும் மத்திய பல்கலைக்கழகத்தில் 60க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்றுவருகின்றனர்.
இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு மாணவர்களின் கல்விக் கட்டணம் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்களும் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அனைத்துக் கட்சி சார்பில் பல்கலைக்கழக நிர்வாகம், மத்திய அரசைக் கண்டித்து பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை திரும்பப்பெறக்கோரியும், உள்ளூர் மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கக்கோரியும் மத்திய அரசு, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: கல்விக்கட்டண உயர்வு: போராடிய மாணவர்கள் வலுக்கட்டாயமாகக் கைது!