கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டு வாகனங்கள் புதுச்சேரி மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதனையடுத்து உளுந்தூர் பேட்டையை சேர்ந்த கோபு என்பவர் உடல்நலக் குறைவால் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக கோபு ஆம்புலன்ஸ் மூலம் கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது புதுச்சேரி எல்லையான முள்ளோடையில் புதுவை காவல் துறையினர் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி புதுச்சேரிக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். கோபுவிடம் புதுச்சேரியில் சிகிச்சை பெற்ற மருத்துவ சீட்டு இருந்தும் தற்போது மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இருந்தும் உள்ளே அனுமதிக்காததால் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனைத் தொடர்ந்து கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.