உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த உயிர் கொல்லி நோய் இத்தாலி, ஈரான், அமெரிக்கா போன்ற உலக நாடுகளை மிரட்டிவிட்டு தற்போது இந்தியாவில் ஊடுருவியுள்ளது. இந்தியாவில் 60க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருப்பது பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்தச் சூழலில் புதுச்சேரி அரசு, இந்த நோயை தடுக்கும் விதமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், விமான நிலையம், வணிக வளாகங்கள், சந்தைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சுகாதாரத் துறை சார்பாக சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் கூட்டம் மிகுந்த பகுதிகளில், பொது மக்களுக்கு கொரோனா குறித்து விழப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டுவருகின்றன.
முகமூடியுடன் சேற்றில் ஹோலி கொண்டாட்டம் - உற்சாகத்தில் மக்கள்!
இத்தருணத்தில் புதுச்சேரி விமான நிலையத்தில் பயணிகளை சோதிக்கும் வகையில், தினசரி அடிப்படையில் சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு மருத்துவ குழுவினர் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள், உள்நாட்டு விமான பயணிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு பயணிகளிடமும் கொரோனா குறித்து சோதனை மேற்கொண்டு, அவர்கள் சமீபத்தில் ஏதேனும் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார்களா என்றும் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை, இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புக்கான பிரத்யேக அறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..