மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான மேனகா காந்தி மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி அத்தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட மேனகா காந்தி, பாரதிய ஜனதா வாங்கும் வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் தான் ஒரு தொகுதிக்கான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த தேர்தல் ஆணையம், மேனகா காந்தியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிகளை அவர் மீறியுள்ளதாகவும் கூறியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபட கூடாது எனவும் தேர்தல் ஆணையம் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமிய மக்களுக்கு நான் உதவ மாட்டேன் என கூறியதற்காக, மேனகா காந்தி பரப்புரை செய்ய 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.