இந்தியாவில் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு எதிராகக் கும்பல் வன்முறை அதிகரித்துள்ளது. எனவே, அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பாலிவுட் இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், மணி ரத்னம், நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர்.
நாட்டின் புகழைக் கெடுக்கும்விதமாக இவர்கள் கடிதம் எழுதியுள்ளனர் என்று கூறி சுதிர் குமார் ஓஜா என்ற வழக்கறிஞர் பிகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, பாலிவுட் இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், மணி ரத்னம், நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேருக்கு எதிராக தேச துரோக வழக்கு தொடரப்பட்டது.
"அரசுக்கு எதிராக மாற்று கருத்து உடையவர்களுக்கு தண்டனை அளிப்பது இதன்மூலம் தெரிகிறது. ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகிறது. நாட்டின் எதேச்சதிகாரம் வளர்கிறது" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என கேரளா திரைப்பட அமைப்பான சாலசித்ரா அகாதெமி குற்றஞ்சாட்டியுள்ளது.
கடிதம் எழுதியவர்களில் ஒருவரான அதூர் கோபாலகிருஷ்ணன், "காந்தியின் உருவபொம்மையை எரித்தவர்களை தேச துரோகி என குறிப்படுவதில்லை. அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கூட ஆகிவிடுகின்றனர்" என்றார்.