புதுச்சேரியில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் சென்டாக் எனப்படும் ஒருங்கிணைந்த குழு மூலம் நடைபெற்று வருகிறது. இதன் இந்த ஆண்டு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கையேட்டை கல்வித்துறை செயலர் அன்பரசு வெளியிட்டார். இதில் 6 பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 2,326 இடங்களுக்கு, இன்று முதல் 15ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி கல்வித்துறை செயலர் அன்பரசு, ”புதுச்சேரியில் மொத்தம் உள்ள 6 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2,326 இடங்களுக்கு இன்று முதல் மே 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எப்பொழுதும் மே 30ஆம் தேதிக்கு பிறகு தான் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்ற நிலையை மாற்றியுள்ளோம். ஆன்லைனில் விண்ணப்பிக்க சிரமம் இருப்பவர்களுக்கு அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் அதற்கான உதவி மையம் அமைக்கப்படும். அடுத்தாண்டு முதல் வருவாய் துறையின் ஜாதி, இருப்பிட சான்றிதழ் ஆன்லைன் மூலம் சரிபார்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.