டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்ட பல்வேறு மனுதாரர்கள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஷேக் முஜ்தாபா பாரூக்காக வழக்காடும் மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், "பாதிக்கப்பட்டவர்கள் ஒரே குரலில் பேசுகிறார்கள்; தாக்குதல் நடத்துபவர்களை ஊக்குவித்தல், உதவுதல், ஆதரித்தல், பாதுகாத்தல், உதவி செய்தல் ஆகியவற்றி காவல் துறை வகுப்புவாதப் போக்கோடு நடந்துகொண்டது.
பிப்ரவரி 23ஆம் தேதி அன்று பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சுகளைத் தொடர்ந்து வகுப்புவாத தாக்குதல் தொடங்கியது. முக்கியத் தாக்குதல்கள் பிப்ரவரி 23ஆம் தேதியில் தொடங்கி, 26ஆம் தேதி வரை நடந்தன. இந்தக் காலகட்டத்தில் 54க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 600க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. வழிபாட்டுத் தலங்களான 19 மசூதிகள், 2 மதரஸாக்கள், 3 சிவாலயங்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களை அடுத்து ஏராளமான நபர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காவல் துறையினரால் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான முதல் தகவல் அறிக்கைகளை (எப்ஐஆர்) பற்றி கூறும் பிரமாணப் பத்திரம், ”சட்டப்படி அரசின் எந்தவொரு வலைதளத்திலும் டெல்லி கலவரம் சம்பவத்தை அடுத்து போடப்பட்ட எப்ஐஆர்கள் எதுவும் பதியப்படவில்லை. இது உண்மை வெளிவரா நிலைக்கு வழிவகுத்திருக்கிறது. எனவே, டெல்லி காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட அனைத்து எப்ஐஆர்களையும் டெல்லி காவல் துறையின் இணையதளத்தில் பதிய உத்தரவிட வேண்டும். மேலும், வன்முறையின்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களின் சொத்துக்களைக் கையகப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனுதாரர்களின் கருத்துப்படி பெரும்பாலான எப்ஐஆர்களில் காவல் துறையினர் தகவலறிந்தவர்களாக இருக்கும்போதும், எப்ஐஆர்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் இல்லை, பாதிக்கப்பட்டவர்களின் பதிந்த வழக்குகளில் மிகக் குறைவான எப்ஐஆர்களே பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.என். படேல், சி. ஹரிஷங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த மனுக்கள் மார்ச் 12ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, வெறுக்கத்தக்க பேச்சுகளைப் பேசி வன்முறையைத் தூண்டி குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் இந்த மனுக்கள் தொடர்பில் டெல்லி காவல் துறை, டெல்லி அரசு, அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மார்ச் 20ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, சல்மான் குர்ஷித், பாஜக தலைவர்கள் அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா, ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அக்பருதீன் ஓவைசி, வாரிஸ் பதான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் பதிலை நீதிமன்றம் கோரி இருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
இதையும் படிங்க : கொரோனா எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்!