புதுச்சேரியில் உள்ள, அனைத்து அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும், ஒட்டுமொத்த தொழிலாளர்களும் சேர்ந்து
நிலுவையில் உள்ள சம்பள தொகையை உடனடியாக வழங்கக் கோரி, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக, புதுச்சேரி மாநில ஏஐடியூசி உள்ளிட்ட தொழற்சங்கத்தினரும் நகரில் ஆங்காங்கே ஆட்டோக்களை குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புல்வார்டு பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து துணைநிலை ஆளுநர் மாளிகை மற்றும் சட்டப்பேரவை வளாகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்த அரசு சார்பு நிறுவனங்களின் பணியாளர்கள் அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்த போராட்டத்துக்கு புதுச்சேரி மாநில காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதைத்தொடர்ந்து அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபடத் தயாராக இருந்த தொழிற்சங்கத்தினரால், சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதற்கிடைேயே, ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை அருகில் ஏராளமான தொழற்சங்கத்தினர், அரசு சார்பு நிறுவனங்களின் பணியாளர்கள், திடீரென முற்றுகையில் ஈடுபட முயன்றதால் பெரியக்கடை மற்றும் ஒதியன்சாலை காவல்துறையினர் தடியடியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட முயன்ற 300க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.