'கஃபே காபி டே' உரிமையாளர் வி.ஜி. சித்தார்த்தா நேற்றிரவு கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது மாயமானார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடிவருகின்றனர். இந்நிலையில் சித்தார்த்தா, 'கஃபே காபி டே' வாரிய இயக்குநர்களுக்கு எழுதிய கடிதம் தற்போது கிடைத்துள்ளது.
அதில், "ஆறு மாதங்களுக்கு முன்னர் எனது நண்பரிடம் பங்குகளைக் கொடுத்து அதற்கு பதில் ஒரு பெரிய தொகையைக் கடனாகப் பெற்றேன். இப்போது மீண்டும் அந்தப் பங்குகளை வாங்கச் சொல்லும்படி தரப்படும் அழுத்தத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் ஒருபோதும் யாரையும் ஏமாற்ற நினைத்ததில்லை. ஒரு தொழில்முனைவோராக நான் தோல்வியடைந்துவிட்டேன். என்றேனும் ஒருநாள் எனது நிலைமையைப் புரிந்துகொண்டு என்னை மன்னிப்பீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
காவல் துறையினர், இந்த வழக்கை இதுவரை மாயமான வழக்காகவே விசாரித்துவருகின்றனர். முன்னதாக கர்நாடக எம்பி ஷோபா கரண்ட்லேஜே, சித்தார்த்தா வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக்கோரி உள் துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மனு அளித்தார்.
'கஃபே காபி டே' நிறுவனம் பல்வேறு வங்கிகளிடமிருந்து சுமார் எட்டாயிரம் கோடி கடன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சித்தார்த்தா மாயமானதால் காலை முதல் 'கஃபே காபி டே' பங்குகள் தொடர்ந்து சரிந்துவந்தது. தற்போது 20 விழுக்காடு சரிந்து ரூ. 153.40இல் உள்ளது.