காணொலி வாயிலாக செய்தியாளரைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், ”மே 12ஆம் தேதி அறிவித்த பொருளாதார தொகுப்பு எந்த விதத்திலும் ஏழை , எளிய மக்களுக்கு பயன்படவில்லை.
பல்கலைக்கழகம் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு அதிகப்படியான நிதியை முதலீடு செய்ய வேண்டும். அதுவே புதிய கண்டுபிடிப்புகள், அறிவுசார் சொத்துகளை உருவாக்கும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 விழுக்காடு மட்டுமே ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் செலவிடப்படுகிறது.
ஆனால், இஸ்ரேல், கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முறையே தங்கள் மொத்த உள்நாட்டு உறபத்தியில் 4.6, 4.5, 3 விழுக்காட்டை முதலீடு செய்கின்றன. பல்கலைக்கழகங்களில் வன்முறையை உருவாக்க ஏபிவிபி போன்ற அமைப்புகளை அனுப்பாமல், நாட்டின் வளத்தை உயர்த்தும் அறிவுசார் சொத்துடமைகளை உருவாக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.
மருத்துவ உபகரணங்கள், மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள், நூற்பாலைகளுக்கான மூலப்பொருள்கள், நிலகரித் துறை போன்றவற்றிற்கு மற்ற நாடுகளை இந்தியா சார்ந்திருக்கிறது. தற்சார்பு இந்தியாவாக நாம் மாற வேண்டும் என்றால் நுகர்வோர் மட்டத்திலிருந்து உற்பத்தி மட்டத்திற்கு இந்தியா நகர வேண்டும்" என்றார்.