பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (பி.எம்.சி) மும்பை பாந்தர் (கிழக்கு) பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில் நான்காயிரத்து 355 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலர்கள், வங்கியின் முன்னாள் இயக்குநர் ஜோய் தாமஸை கைது செய்தனர்.
இதையடுத்து அவர் நாளை மறுநாள் அக்டோபர் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
இதேபோல் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட ஹவுசிங் டெவலப்மென்ட் அண்ட் இன்ஃப்ராடெக்சர் லிமிடெட் (ஹெச்.டி.ஐ.எல்.) நிறுவன நிர்வாக இயக்குநரும், அவரின் மகனும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமும் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் ஊழல் நடந்த 2012ஆம் ஆண்டில் பி.எம்.சி வங்கியின் முன்னாள் தலைவர் வர்யம் சிங் சுமார் 400 கோடி மதிப்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றை வாங்கியிருப்பதும், மேலும் பல சொத்துக்களை வாங்கி குவித்ததாகவும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலர்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வர்யம் சிங்கையும் ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தைச் சேர்ந்த ராகேஷ் வதவன், சரங் வதவன் ஆகியோரையும் வரும் அக்டோபர் 16ஆம் தேதியான நாளை வரை காவல்துறையினர் விசாரணை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: பிஎம்சி வங்கியில் ரூ.4,375 கோடி ஊழல் - பிரபல பாலிவுட் நடிகருக்கு சிக்கல்?