புதிய பாபூர்-புதிய குர்ஜா வழித்தடத்தில் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்தை (ஈ.டி.எஃப்.சி.) பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்குக் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார்.
ஈ.டி.எஃப்.சி.யின் 351 கி.மீ. நீளமுள்ள ‘புதிய பாபூர்-புதிய குர்ஜா’ ரயில் போக்குவரத்து வழித்தடம் உத்தரப் பிரதேசத்தில் ரூ.5,750 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
இந்த வழித்தடம் உள்ளூர்த் தொழில்களான அலுமினியம் தொழிற்சாலைகள் (கான்பூர் தேகத் மாவட்டத்தின் புக்ரயான் மண்டலம்), பால்வளத் துறை (அவுரையா மாவட்டம்), ஜவுளி உற்பத்தி (எடவா மாவட்டம்), கண்ணாடித் தொழிற்சாலைகள் (பிரோசாபாத் மாவட்டம்), பானைத் தயாரிப்புத் தொழில் (புலந்சாகர் மாவட்டத்தின் குர்ஜா), பெருங்காய உற்பத்தி (ஹத்ரஸ் மாவட்டம்), பூட்டு மற்றும் உலோகப் பொருள் தொழிற்சாலைகள் (அலிகார் மாவட்டம்) போன்றவற்றுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். மேலும், இந்த வழித்தடம், கான்பூர்- தில்லி இடையில் உள்ள முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.
பிரயாக்ராஜில் அமைக்கப்படும் நவீன சரக்குப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் (ஓசிசி), கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்தின் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படும்.
இந்த ஓசிசி, உலகளவில் மிகப்பெரிய அமைப்புகளில் ஒன்று. இந்தக் கட்டடம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் ‘கிரிகா 4’ தரத்தில் ‘சுகம்யா பாரத் திட்டத்தின்’ விதிமுறைகளின்படி கட்டப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் 1856 கி.மீ. லூதியானா (பஞ்சாப்) அருகில் உள்ள சானேவால் பகுதியிலிருந்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட் வழியாக மேற்குவங்கத்தின் டன்குனியில் முடிவடைகிறது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள தத்ரியை மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்துடன் இணைக்கிறது. மேற்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் நடைபாதை (1,504 பாதை கி.மீ.) அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இது உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் வழியாகப் பயணிக்கும்.